புதன்கிழமை (ஏப்ரல் 23) ஹைதராபாத்தின் உப்பல் ரஜீவ் காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் தொடரின் 41ஆவது போட்டியில், மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தோற்கடித்தது.
மும்பையின் வெற்றிக்கு காரணமாக இருந்தது ட்ரென்ட் போல்டின் துல்லியமான பந்துவீச்சும், முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா விளாசிய அதிரடி அரைசதமும். இந்த இரண்டு முன்னணி வீரர்களின் பங்களிப்பு, அணிக்கு எளிதான வெற்றியை தந்தது.

மறுபக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஹென்றிச் க்ளாசன் குவித்த அரைச் சதம் வீண்போனது.
இந்த வெற்றியுடன் மும்பை இண்டியன்ஸ், 10 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 7ஆம் இடத்திலிருந்து 3ஆம் இடத்திற்கு முன்னேறியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 35 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
ஆனால், ஹென்றிச் க்ளாசன், அபநவ் மனோஹர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
க்ளாசன் 44 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களையும் அபிநவ் மனோகர் 37 பந்துகளில் 2 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களை விட அனிகெட் வர்மா (12) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.
பந்துவீச்சல் ட்ரென்ட் போல்ட் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 15.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றயீட்டியது.
ரெயான் ரிக்ல்டன் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (13 – 1 விக்.)

ஆனால், ரோஹித் ஷர்மா 2ஆவது விக்கெட்டில் வில் ஜெக்ஸுடன் 64 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் சூரியகுமார் யாதவ்வுடன் 53 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
ரோஹித் ஷர்மா 46 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களையும் சூரியகுமார் 19 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 40 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 33 ஓட்டங்களைக் கொடுத்து ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆட்டநாயகன்: ட்ரென்ட் போல்ட்.