பழனி அருகே தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்து விழ, அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி, விபத்தை தடுத்துள்ளா அந்தப் பேருந்தின் நடத்துநர்.
எனினும், மாரடைப்பால் சரிந்து விழுந்த ஓட்டுநர் பிரபு அங்கேயே மரணமடைந்தார். போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் பிரபு இயக்கிச் சென்றுள்ளார்.
இந்தப் பேருந்து கணக்கம்பட்டி தாண்டி புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பிரபுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பேருந்து ஓடும் போதே மயங்கி விழுந்து பிரபு உயிரிழந்தார்.
அருகில் இருந்து நடத்துநர், டிரைவர் பிரபு மயங்கியதை பார்த்து மிக விரைவாகச் செயல்பட்டு பேருந்தில் உள்ள பிரேக்கை தனது கைகளால் அழுத்தி சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்து விபத்தில் சிக்காமல் தப்பியது. பேருந்து நின்றதும் பயணிகள் ஓடி வந்து டிரைவர் பிரபுவை தூக்க முயன்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்.
பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் நெஞ்சு வலியால் ஓட்டுநர் திடீரென சரிந்து விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.