பாலஸ்தீனத்தின் மேற்கு கரைக்கு சென்ற ஐநா மற்றும் 20க்கும் அதிகமான நாடுகளின் பிரநிதிகளை மிரட்டும் வகையில் இஸ்ரேல் படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் திரும்பி உள்ள நிலையில் இந்த சம்பவத்தால் ஸ்பெயின், துருக்கி, எகிப்து கண்சிவந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.. ஹமாஸ் அமைப்பை போன்று இன்னும் சில அமைப்பினர் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.
மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு சில இடங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்குகரையின் ஜெனின் நகரில் தற்போது ஆயுதக்குழுவினரை எதிர்த்து இஸ்ரேல் படை வீரர்கள் போர் புரிந்து வருகின்றன.
போர் புரிந்து வரும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை பல நாடுகள் கண்டித்துள்ளன. இதற்கிடையே தான் ஐநாவை சேர்ந்தவர்கள் மற்றும் 20க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதிக்கு சென்றுள்ளனர். எகிப்து, துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த பிரதிநிதிகளை மிரட்டும் வகையில் இஸ்ரேல் படை வீரர்கள் வார்னிங் செய்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.