பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஸ்தர் மாவட்டத்தில் பள்ளி வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகானத்தில் ராணுவ பள்ளி வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ கண்டோன்மெண்டில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பள்ளி குழந்தைகள் 4 பேர் பலியாகினர்.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்ததாகவும் இவர்களில் பலர் படுகாயம் அடைந்து இருபதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக்கொண்டு பள்ளி வாகனத்தில் மோத செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் பள்ளி வாகனம் பலத்த சேதம் அடைந்து மாணவர்கள் 38 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணம் ஆகும். ஆனால் மக்கள் தொகை இந்த மாகாணத்தில் மிக குறைந்த அளவே உள்ளது.
ரான் ஆப்கானிஸ்தான் உடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ள பலுசிஸ்தான் மக்கள் தங்களை ஒருபோதும் பாகிஸ்தானியர்களாகக் கருதுவது இல்லை. தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்பதை வலியுறுத்தியே அங்கு தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.. ராணுவம் மற்றும் போலீஸை பயன்படுத்தி அவர்களைப் பாகிஸ்தான் அரசு கட்டுப்ப்டுத்தி வருகிறது.
அதேநேரம் பலுசிஸ்தான் புரட்சியாளர்கள் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். இதனால், அவ்வப்போது அங்கு தாக்குதல்களும் நடைபெறுகின்றன.
இத்தகைய சூழலில் தான் அங்கு பள்ளி மாணவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை முன்னெடுத்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து உள்ளூர் பிரிவினைவாதகுழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது.