30.6 C
Sri Lanka
Friday, April 10, 2026
HomeSports Newsராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கு அதிகாரம் இல்லையா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கு அதிகாரம் இல்லையா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மிகப்பெரிய அளவில் விரிசல் இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தது. அந்தப் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவருக்கு முன்பு, பயிற்சியாளர்கள் குழுவுடன் கேப்டனும் இணைந்து, சூப்பர் ஓவரை வீசப் போகும் பௌலர் யார், பேட் செய்யப் போகும் வீரர்கள் யார் எனத் தீவிரமாக ஆலோசித்து முடிவு செய்வார்கள். இதை நாம் பலமுறை சூப்பர் ஓவர்களின் போது பார்த்திருப்போம்.

ஆனால், டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியின் சூப்பர் ஓவருக்கு முன்பு நடந்த அணிக் கூட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கலந்துகொள்ளவில்லை. அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது, ஒரு வீரர் அவரை உள்ளே வந்து நிற்குமாறு சைகை செய்கிறார். ஆனால், அதற்கு சஞ்சு சாம்சன் இல்லை என தனது கையால் மறுப்பு தெரிவித்துவிட்டு, அணி கூட்டம் நடக்கும் இடத்திற்கு சற்று வெளியே நடந்து கொண்டு இருக்கிறார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவறான பந்துவீச்சாளரையும், பேட்ஸ்மேன்களையும் பயன்படுத்தியதாக அப்போதே விமர்சனம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரை வீசிய அனுபவம் வாய்ந்த ஜோப்ரா ஆர்ச்சரை சூப்பர் ஓவரை வீச வைக்காமல், சந்தீப் ஷர்மாவை பந்துவீச வைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

அதேபோல, அந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி ரன் குவித்து இருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா போன்ற வீரர்களை முதலில் களமிறக்காமல், ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் ரியான் பராக்கை களமிறக்கி இருந்தது. இந்த முடிவுகள் அப்போது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தின. சஞ்சு சாம்சன் இந்த முடிவுகளைச் சரியாக எடுக்கவில்லை என்றும் பலர் விமர்சித்திருந்தனர்.

ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, சஞ்சு சாம்சன் சூப்பர் ஓவர் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு மற்றும் அணி நிர்வாகம்தான் இந்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர் எனத் தெரிகிறது

ஏற்கனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும், ரியான் பராக் மற்றும் அணி நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது பயிற்சியாளர் குழு சூப்பர் ஓவர் குறித்த முடிவுகளை எடுத்தபோது, அதில் கேப்டன் சஞ்சு சாம்சன் எந்தக் கருத்தையும் சொல்லாமல் விலகி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு அதிகாரம் இல்லையா? இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு எந்த முடிவு எடுக்கும் அதிகாரமும் இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் தோல்விகளுக்கு சஞ்சு சாம்சன் மீது மட்டுமே தவறு என்று சொல்ல முடியாது, அவருக்கு அதிகாரம் இல்லை என்பதால் தான் அவர் இவ்வாறு ஒதுங்கி இருக்கிறார் எனவும் சில ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ராகுல் டிராவிட் இதுபோன்ற விரிசல்களை ஏற்படுத்தக் கூடியவர் இல்லை. அப்படி என்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் வேறு யாரேனும் இந்த விரிசலுக்குக் காரணமாக இருக்கிறார்களா? என்ற கேள்வியும் தற்போது வலுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments