அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்ததே தவிர, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும், ஜனநாயகத்தை நாசம் செய்யும் நீதிமன்றம் என்ற தூணை அழிப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயற்படுவது வெட்கக்கேடான செயலாகும்.
சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுகின்றன.
அவ்வாறே இவற்றின் அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளும் அமைந்து காணப்படுகின்றன.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ சரியான புரிதல் இல்லையெனில், மொன்டெஸ்கிவின் நூலைப் படித்துப் பார்க்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் நீதிமன்றத்தில் தலையிடுவதன் மூலம் ஜனநாயகம் அழிக்கப்படும் அதேவேளை, நீதிமன்றத்தின் சுதந்திரம், மக்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மை மற்றும் நீதிபதிகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
உலகின் பல நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் அதிகார பீடங்கள் நீதிமன்றத்திலும் சட்டத்துறையிலும் தலையிட முயன்றுள்ளன.
அண்மையில் இந்தியாவில் நடந்த சம்பவங்களை மறந்துவிட வேண்டாம் எனத் தற்போதைய அரசாங்கத்திற்கு ஞாபகமூட்டிக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



