இலங்கையின் நாளாந்தப் பால் தேவையில் 43 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வருடாந்த பால் உற்பத்தியை தற்போதைய 410 மில்லியன் லீற்றரிலிருந்து 1,200 மில்லியன் லீற்றராக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்காக, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
மேலும், பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் நிக்கவெரட்டிய விலங்கு வளர்ப்புப் பண்ணையை அபிவிருத்தி செய்வதற்காக மேலும் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி சார்பைக் குறைத்து, நாட்டின் பால் உற்பத்தித் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



