இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக டெல்லியில் உள்ள முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் Terminal 3 மற்றும் சில அரசாங்க அலுவலகங்கள் இந்த மிரட்டல்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு இன்று காலை கிடைத்த மின்னஞ்சலில், நாளைய சுதந்திர தின நிகழ்வுகளுடன் தொடர்புடைய Red Fort-ஐ இலக்காகக் கொண்ட தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
எனினும், மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பின்னர், விமான நிலையம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு வந்த மிரட்டல்கள் புரளி என அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



