21.3 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsசாமிமலையில் பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு

சாமிமலையில் பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு

பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்புமஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை பகுதியில், பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு கவரவலை தமிழ் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஹட்டன் வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட கோட்டம் மூன்றில் அமைந்துள்ள கவரவலை தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பகுதியில், ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை கவரவலை தோட்ட நிர்வாகத்தினால் இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தரம் ஒன்று முதல் தரம் 11 வரை கல்வி பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், பாடசாலைக்கு மிக அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டால், தொழிற்சாலையின் இயந்திரங்களினால் ஏற்படும் சத்தம், வாகனங்களின் போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களின் நடமாட்டம் ஆகியவை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, தற்போது அமைந்துள்ள பாடசாலைக்கும் அருகிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கும் இடையிலான தூரம் கூட 5 மீற்றர் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.இதனால், கோப்பி அரைக்கும் தொழிற்சாலையை பாடசாலை அமைந்துள்ள பகுதியில் நிறுவுவதற்கு பதிலாக, ஏற்கனவே தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் நிறுவுமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கவரவலை தமிழ் வித்தியாலயம் நீண்ட வரலாற்றைக் கொண்ட பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 125 ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு மாடி கொட்டகையில் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு மாணவர்கள் அங்கு மாற்றப்பட்டனர்.அதேவேளை, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான வகுப்புகளுக்காக சாமிமலை நகருக்கு அருகில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, கவரவலை தமிழ் மகா வித்தியாலயம் உருவாக்கப்பட்டது.

வரலாற்று ரீதியாக, குறித்த பழைய இரண்டு மாடி கொட்டகையின் கீழ்தளத்தில் தோட்ட முகாமையாளர் அலுவலகம், தோட்ட உத்தியோகத்தர்களின் அலுவலகம், தோட்ட காரியாலயம் மற்றும் பாடசாலை உள்ளிட்டவை இயங்கி வந்ததாகவும், மேல் மாடியில் சினிமா கொட்டகை அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அக்காலத்தில் வெள்ளையர்களின் நிர்வாக நடவடிக்கைகளும் அந்த கொட்டகையில் இடம்பெற்றதாக வரலாற்றுத் தகவல்கள் உள்ளன.பின்னர் தோட்ட காரியாலயம் கவரவலை தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதிக்கு மாற்றப்பட்டு, அதன் பின்னர் தோட்ட முகாமையாளர் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலப்போக்கில், தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான ஒரே பாடசாலையாக கவரவலை தமிழ் வித்தியாலயம் இயங்கி வந்ததுடன், சாமிமலை, பெய்ந்தோர், ஓல்ட்டன், கவரவலை, மாநெலி, ஸ்டோக்ஹோம் மற்றும் ஸ்டரஸ்பி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்றுள்ளனர்.

பின்னர் சாமிமலை நகருக்கு அருகில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு உயர்தர வகுப்புகள் அங்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கவரவலை பாடசாலையில் ஆரம்ப மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளன.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தரம் 11 வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது கவரவலை தோட்டத்தின் நான்கு பிரிவுகளில் வசிக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளும், ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ஓல்ட்டன் மற்றும் ஸ்டோக்ஹோம் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளும் இங்கு கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கை கைவிடப்படாவிட்டால், ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் மாணவர்களை பாடசாலையிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படலாம் என பெற்றோர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே, இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகம் மற்றும் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும், பெருந்தோட்டத்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சாமிமலை கவரவலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments