சீனாவின் கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜெஜியாங் மாகாணத்தின் சாங்சிங் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது வீடொன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போன மூவரைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, சீனாவின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரத்தில் சீனாவின் சில பகுதிகளில் பதிவான ஒருநாள் மழைவீழ்ச்சி, அங்குள்ள வானிலை நிலையங்களின் முந்தைய சாதனைகளையும் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில், ஆற்றங்கரை உடைந்ததைத் தொடர்ந்து Zhoukou நகரில் 781 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சீனாவின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியான தை ஏரி பகுதியிலும் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புயல் டொல்பினின் எஞ்சிய தாக்கம், குளிர் காற்று மற்றும் பருவமழை அமைப்பு உள்ளிட்ட காரணிகள் சீனாவின் சில பகுதிகளில் மழையின் தீவிரத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



