2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில், இலங்கையின் பல பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த கொடூரத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததுடன், பலர் கடுமையாக காயமடைந்தனர்.
இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன்படி, தேவாலயங்களில் மணி ஒலி எழுப்புதல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் இன்று காலை இடம்பெறவுள்ளன.
இதேவேளை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக அந்த தேவாலயத்தைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனைகள் நிறைவடையும் வரை தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
மேலும், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.
இதனிடையே, ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘பிரார்த்தனை நடைபவனி’ இன்று மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்தில் ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் நாட்டின் சமாதானத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் பெரும் சவாலாக அமைந்தது. ஆண்டுகள் கடந்தாலும், உயிரிழந்தவர்களின் நினைவு மக்கள் மனங்களில் இன்னும் அழியாமல் நிலைத்து நிற்கிறது.
இந்நாளில், உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், இப்படியான சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.



