அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகி வரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) இன்று இரவு இஸ்லாமாபாத் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரான் மற்றும் வொஷிங்டன் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை பாகிஸ்தான் இன்று அறிவிக்கக்கூடும் என அல் அரபியா (Al Arabiya) செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதியில் அடுத்தகட்ட இராஜதந்திர நகர்வுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக இஸ்ரேல் இன்று தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான முற்றுகை ‘100% பயனுள்ளதாக’ இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும் இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்கள் நீடிக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி ஆகியோர் பிராந்திய முன்னேற்றங்கள், போர்நிறுத்தம் மற்றும் அமெரிக்கா-ஈரான் ஈடுபாட்டின் பின்னணியில் இஸ்லாமாபாத் முன்னெடுக்கும் இராஜதந்திர முயற்சிகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும் ஈடுபாடு அவசியம் என்பதை இஷாக் தார் இதன்போது வலியுறுத்தினார்.
இஸ்லாமாபாத்தின் “தொடர்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான மத்தியஸ்தப் பாத்திரத்தை” அரக்சி பாராட்டியதுடன், இரு தரப்பும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து தடைகள், இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து அதிகரித்த பதற்றமான சூழலிலேயே இந்த இராஜதந்திர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான சமீபத்திய கருத்துப் பரிமாற்றங்கள் போர்நிறுத்த விதிமுறைகள், கடல்சார் அணுகல் மற்றும் பரந்த பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்தியுள்ளன.
இரு தரப்பிலிருந்தும் வெளிவரும் பகிரங்கக் கருத்துக்கள், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக இருந்தாலும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்பதையே காட்டுகின்றன.
வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு தரப்புடனும் உறவுகளைப் பேணி வரும் பாகிஸ்தான், இந்த இழுபறி நிலைக்கு மத்தியில் ஒரு தகவல் தொடர்பு பாலமாக அண்மைய வாரங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.



