இவ்வருட யால பருவ நெல் கொள்வனவுச் செயற்பாட்டின் கீழ், நெல் சந்தைப்படுத்தல் சபையினால் இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நெல் கொள்வனவு நடவடிக்கைகளின் கீழ் இந்த நெல் தொகை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) சமன் திலக பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதிகளவான நெல் அம்பாறை மாவட்டத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு 3,148 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 567 மெற்றிக் தொன் நெல்லும், வவுனியா மாவட்டத்தில் இருந்து 620 மெற்றிக் தொன் நெல்லும் இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறும் நெல் அறுவடையின் அளவுக்கு ஏற்ப நாடு முழுவதும் நெற்களஞ்சியங்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக 148 களஞ்சியசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



