டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில், ஹட்டன் – போடைஸ் வழியாக டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் தெரிவித்ததாவது, மற்றொரு பேருந்திற்கு வழிவிட முயன்றபோது குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சமயத்தில் பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



